22-10-2010 & 23-10-2010
காலை 5.00 மணிக்கு பரம்சிவம் சூடான டீயுடன் எங்களை எழுப்பினார். காலை 7.30 மணிக்கு எல்லோரும் புறப்பட தயாரானோம். குளிர்ச்சியான பிரதேசம் என்பதால் தண்ணீர் மிகவும் குளிர்ந்து இருந்தது. விருந்தினர் மாளிகையில் ஹீட்டரிருந்ததால் சுடுநீர் கிடைத்ததால் குளியல் இனிதே முடிந்தது. பரமசிவத்தை ஊத்தில் இறக்கிவிட்டோம். அவரின் சொந்த ஊரே இதுதான். அவர் வனத்தடுப்பு காவலராக பணிபுரிகிறார். அவரின் உடலமைப்பே அவர் காட்டில் எப்படியெல்லாம் அலைந்து திரிந்திரிப்பார் என்பதை காட்டுகிறது. சுமார் 9.00 மணிக்கு நாலுமுக்கு மணிமுத்தாறு எஸ்டேட் அலுவலகத்தில் திரு.வில்ஸன் அவர்களை சந்தித்தோம். அவர் எங்களுக்கு காலை டிஃபனும் மற்றும் எஸ்டேட் ஃபாகடரியை சுற்றிப்பார்க்கவும் மாஞ்சோலை டீ எஸ்டேட்டில் இவரைப்போலவே பணியிலுள்ள அவரின் நண்பர் திரு.ஜான் செல்வராஜ் அவர்கள் மூலமாக ஏற்பாடு செய்திருந்தார். திரு.வில்ஸனுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். பசுந்தேயிலை(கீரின்டீ) மற்றும் டீ டஸ்ட் அவரின் அலுவலகத்தைலேயே வாங்கிகொண்டோம். பின் மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு பயணமானோம். மாஞ்சோலை டீ ஃபேக்டரி கேன்டீனில் எங்களுக்கு காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டீ ஃபேக்டரியில் பணிபுரியும் திரு.பேச்சிமுத்து அவர்கள் திரு.செல்வராஜ் அவர்களின் வேண்டுகோளின்படி எங்களுடன் கேண்டீனுக்கு உடன்வந்தார். சூடான இட்லி, சட்னி, சாம்பார் மற்றும் வடையுடன் காலை சிற்றுண்டி முடிந்த்து. திரு.பால்வின் அவர்கள் எங்களுக்கு டீ ஃபேக்டரியை சுற்றி காண்பித்தார். டீ இலைகள் 12 வெவ்வேறு நிலைகளில் எவ்வெவ்வாறு தரத்திற்க்கேற்ப பிரிக்கப்படுகிறது என்பதை விளக்கினார். பின் எல்லோரிடமும் விடைபெற்று கிளம்பினோம்.
மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் வழியாக குற்றாலம் வந்தடைந்தோம். ஐந்தருவியில் பாலகிருஷணனும், குமாரவேலுவும் குளித்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரை நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். சசிதரன் லாட்ஜில் இரண்டு அறைகளுக்கான சாவிகளை பெற்றுக்கொண்டு ஆண்டாள் கோயிலுக்கு சென்றோம். தரிசனம் முடித்து கடையில் கோதுமை அல்வா மற்றும் பால்கோவா வாங்கிக்கொண்டோம். கதிரவன் உணவகத்தில் இரவு சிற்றுண்டியை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பினோம்.
மறுநாள் காலையில் கதிரவன் உணவகத்தில் டிஃபனை முடித்துக்கொண்டு சென்னை நோக்கி கிளம்பினோம். திருமங்கலம் மதுரை, மேலூர், விராலிமலை வழியாக திருச்சியை பகல் 1 மணிக்கு அடைந்தோம். பேருந்து நிலையம் அருகிலுள்ள அபிராமி உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டு மாலை 5.30 மணிக்கு சென்னையை அடைந்தோம். எல்லோரையும் அவரர்கள் இடத்தில் இறக்கிவிட்டு நான் வீட்டை அடையும்பொழுது இரவு மணை 7.00.
16-10-2010 சனியன்று புறப்பட்டு 23-10-2010 சனியன்று சென்னைக்குத் திரும்பினோம். இந்த எட்டு நாட்களும் விதவிதமான அனுபவங்கள். மலைகள், காடுகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், அணைக்கட்டுகள், கடற்கரைகள் என்று எல்லாமே வித்தியாசமான அனுபவங்கள். இந்த 8 நாட்களும் மழை போன்ற இயற்கை இடர்பாடுகளோ மற்றும் வண்டி பழுதடைதல் போன்ற செயற்கை இடர்பாடுகளோ இன்றி பிரயாணம் சுமார் 2100 கிலோமீட்டர் பயணம் அருமையாக அமைந்தது. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில சாலைகள், கிராமச்சாலைகள், சமவெளி சாலைகள், கரடு முரடான மலைச்சாலைகள் மற்றும் சாலைகளே இல்லாத இடங்களிலும் நண்பர்களின் துணையுடன் காரை ஒட்டி வந்தது எனக்கு சவாலான திரில்லிங்கான அனுபவமாகும்.