கடந்த வருடங்களை போலவே இந்த வருடமும் மலையும் காடும் சார்ந்த இடங்களுக்கு சுற்றுலா செல்வதென முடிவெடுக்கப்பட்டது. சுற்றுலா செல்வதற்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டன. முதலில் தேனி அருகிலுள்ள மேகமலையில் ஆரம்பித்து அம்பாசமுத்திரம் அருகிலுள்ள மாஞ்சோலையில் முடிப்பதெனவும் இடையிலுள்ள சுற்றுலா முக்கியத்துவமுள்ள இடங்களையும் சுற்றுலாவில் சேர்த்துக்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டது.
நண்பர்கள் (ரெங்கநாதன்(நான்),சுகுமார்,பாலகிருஷ்ணன் மற்றும் குமாரவேல்) கலந்துரையாடி பயணத்திட்டம் தயாரித்தோம்.
TEAM MEMBERS
BALAKRISHNAN,RANGANATHAN,SUKUMAR,KUMARAVELபாலகிருஷ்ணன்,ரெங்கநாதன்,சுகுமார் மற்றும் குமாரவேல்
TOUR VECHICLE ZEN ESTILO-2009 TN-20-BX-6300
இனிமையான பயணத்திற்கு உறுதுணையாக ஒத்துழைத்த கார்.
16-10-2010
காலை 7.00 மணி-பயணம் தொடங்குமிடம்-சென்னை
போரூர் அருகிலுள்ள சென்னை பைபாஸ் சுங்கச்சாவடி.
வழி - திருச்சி, திண்டுக்கல், பெரியகுளம். பெரியகுளம் அருகிலுள்ள கும்பகரை அருவி மற்றும் சோத்துப்பாறை அணையை பார்த்துவிட்டு
தேனி சென்று இரவு தங்குதல்
திட்டமிட்டபடி காலை 7.15 மணிக்கு போரூர் சென்னை பைபாஸ் சுங்கச்சாவடிக்கு சுகுமார் பாலகிருஷ்ணனையும் குமாரவேலையும் தன்னுடைய காரில் அழைத்துவந்துவிட, அவர்களை என்னுடைய ஜென் எஸ்டிலோ காரில்(TN-20-BX-6300) ஏற்றிக்கொள்ள இனிய பயணம் தொடங்கியது.
சுமார் 10.30 மணிக்கு திருச்சி சென்றடைந்தோம்.காலையிலிருந்தே யணத்தின் ஈர்ப்பில் எதுவுமே சாப்பிடாததால் திருச்சிக்கு வரும்பொழுதெல்லாம் சாப்பிடும் வழக்கமான ஒட்டல் மதுரா விலாஸைத் தேடி மலைக்கோட்டை அருகிலுள்ள ஆண்டாள் தெருவுக்கு வந்தபொழுது ஆயுதபூஜையின் விடுமுறை காரணமாக மூடியிருந்த ஒட்டலைக் கண்டு ஏமாற்றமடைந்தோம். மனதைத் தேற்றிக் கொண்டு திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள சங்கீதாவிற்க்குச் சென்றோம்.
மதிய உணவை சங்கீதாவில் முடித்து திண்டுக்கல்,பெரியகுளம் வழியாக தேனிக்கு பயணம் தொடர்ந்தோம். பெரியகுளம் போகும் வழியில் பெரியகுளத்துக்கு 7 கிலோமீட்டர் இருக்கும்பொழுது வலதுபக்கம் கும்பக்கரை அருவிக்கு செல்லும் பாதை பிரிகிறது. இருபக்கமும் பாக்கு மரங்கள் சூழ்ந்த அழகிய பாதையில் சுமார் 5 கிலோமீட்டர் சென்றதும் கும்பக்கரை அருவிக்கரை வருகிறது. நாங்கள் சென்றபொழுது அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அருவிக்கருகே செல்வதற்கு வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.பாறைகள் வழியாக அருவி சிற்றாறுபோல வழிந்தோடி வருகின்ற இடத்தில் குளியலை முடித்தோம்.
அங்கிருந்து பெரியகுளம் நோக்கி செல்கையில் பெரியகுளத்துக்கு 2 கிலோமீட்டருக்கு முன்னால் சோத்துப்பாறை அணைக்குச் செல்லும் வழி வலதுபுரத்தில் பிரிந்து செல்கிறது. ஆற்றோரமாய் செல்லும் பாதையில் சுமார் 10 கிலோமீட்டர் சென்றதும் மலைகளின் நடுவே அணைக்கட்டு தெரிகிறது. சோத்துப்பாறை அணைக்கட்டு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் குன்றுகளின் நடுவே வராகநதியின் மேல் அமைந்துள்ளது. நாங்கள் அதை சென்றடையும்பொழுது மாலை 6 மணியாகிவிட்டது. அணைக்கட்டுக்குள் போய்வர அனுமதியில்லாததால் அணைக்கட்டின் உச்சிவரை காரிலேயே சென்று அணைக்கட்டின் அழகை ரசித்தோம்.
பெரியகுளத்திலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தேனியை சுமார் 8 மணிக்கு அடைந்தோம். எங்களின் தேனி நண்பர் திரு.பரமசிவம் மூலம் முன்னரே பதிவுசெய்திருந்த பஸ்ஸ்டாண்ட் அருகிலுள்ள எவரஸ்ட் லாட்ஜில் அன்றிரவு தங்கினோம்.இரவு உணவை அருகிலுள்ள மாருதி(தேனியில் ஒரளவு சுமாரான) ரெஸ்டாரண்டில் முடித்துக்கொண்டோம்.