Pages

Tuesday, April 19, 2011

2010 MEGAMALAI , MANJOLAI TOUR PROGRAM 2010 மேகமலை,மாஞ்சோலை பயணம் 17-10-2010

17-10-2010-  காலை 7.00 மணி

மேகமலைக்கு ஹைவேவிஸ் எஸ்டேட்ஸ் கிளம்புதல். மேகமலை, வெண்ணியாறு, மணலாறு அருவிகள் மற்றும் அணைகளை சுற்றிப் பார்த்தல்இரவு தங்குதல் - மேகமலை

நண்பர் பரமசிவம் காலை 5.30 மணிக்கே வந்துவிட்டார். சின்னமனூர் செல்லும் வழியிலுள்ள மீனாட்சி ஹோட்டலில் காலை உணவை முடித்துக்கொண்டு சின்னமனூர் வழியாக கம்பம் செல்லும் சாலையில் பயணம் தொடங்கினோம். சின்னமனூர் சென்றதும் இடது பக்கம் ஹைவேவிஸ் எஸ்டேட்ஸ் செல்லும் பாதை பிரிகிறது. மலை கிராமங்கள் வழியாக செல்லும் மிகவும் சிறியசெம்மண் பாதை. ஹைவேவிஸ் செல்லும் மலைப்பாதை மிகவும் மோசமான நிலையிலுள்ளது. சிறிய வண்டிகள் செல்வது மிகவும் சிரமம். மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும். மிகுந்த சிரமத்துடன் காலை 10.00 மணிக்கு ஹைவேவிஸ் பஞ்சாயத்து அலுவலகத்தை அடைந்தோம். இந்த அலுவலகத்தின் முதல்தளம் தான் விருந்தினர் மாளிகை.

இந்த அலுவலகம் அழகிய ஒரு ஏரிக்கரையில்அமைந்துள்ளது. ஏரிக்கரையின் அக்கரை மரங்கள்டர்ந்த காட்டுப்பகுதி. இவ்வனப்பகுதியில் யானைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டெருமைகள் வசிக்கின்றன் எனவும் அவைகள் உணவுக்காகவும் மற்றும் தண்ணீருக்காகவும் இவ்விடத்திற்க்கு வருகை புரியும் என்றும் தெரிந்துகொண்டோம்.
          Highwavy's Guest House

















எங்களுக்கு முதல்தளத்தில் ஏரிக்கரையை ஒட்டிய இரண்டு அறைகளை தேனி நண்பர் பரமசிவம் அவர்கள் முன்பதிவு செய்திருந்தார். இந்த அலுவலகத்தைஒட்டி அலுவலக வளாகத்திலேயே திரு.முருகன் அவர்கள் உணவகம் வைத்திருக்கிறார். அவர்மூலம்தான் இங்குதங்க முன்பதிவு செய்யப்பட்டது. அவர்தான் இங்கு வருபவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்கிறார். இங்குள்ள ஒரே உணவகமும் இதுதான். வெறெங்கும் சாப்பிட கடைகளில்லை.


சிறிது ஒய்வுக்குப் பின் அறையிலிருந்து கீழிறங்கி ஏரிக்கரையோரமாய் சிறிதுநேரம் நடைபயின்றோம். கடைமுருகனின் மகன் அஜீத்தை அழைத்துக்கொண்டு தூவானம் அணைக்கட்டுக்குச் சென்றோம். இந்த இடத்திலிருந்துதான் சுருளி மின்நிலையத்திற்க்கு மின்சாரம் எடுக்க தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்பொழுது தண்ணீரின் வேகத்தால் தண்ணீர்த்துளிகள் தூவானம்போல் சுற்றிலும் தெறிக்கிறது. இந்த அணைக்கட்டு போகும் வழி இயற்கையின் அற்புதங்களிலொன்று. ஒவ்வொரு வளைவிலும் ஒவ்வொரு அழகு தெரிகிறது.

மதிய உணவை முருகன் அவர்களின் கடையில் முடித்துக்கொண்டோம். நல்ல அறுசுவை உணவென்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. கூட்டு, பொறியல், ரசம், சாம்பார், ஆம்லெட் என்றவரால் முடிந்தளவுக்கு அசத்திவிட்டார். அஜீத்தை மீண்டும் அழைத்துக்கொண்டு 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மகாராஜாமெட்டு என்ற இடத்திற்க்கு சென்றோம். இங்கிருந்து ஒருகோணத்தில் தேக்கடி நீர்தேக்கமும், இன்னொரு கோணத்தில் சுருளி நீர்தேக்கமும் தெரிகிறதுபசுமையான பள்ளத்தாக்குகள் வழியாக தண்ணீர்செல்வது தெரிகிறது. திரும்பிவரும் வழியில் சுருளிஅருவிக்கு தண்ணீர் தரும் இரவலங்காறு அணைக்கட்டைப் பார்த்தோம்.

பிறகு அப்பர் மணலாறு வழியாக வட்டப்பாறை என்றழைக்கப்படும் இடத்திற்க்குச் சென்றோம். இது சர்வசாதாரணமாக விலங்குகள் வந்துலவிச்செல்லும் இடமாம்இது மற்ற இடங்களைவிடமிகவும் குளிர்ச்சியாக உள்ளதுஇவ்விடத்தில் பகலிலேயே பனி சூழ்ந்துள்ளது. நாங்கள் காரை ஒரிடத்தில் நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடந்தோம்.இந்த இடம் மிக அருமையாக உள்ளது. ஆனால் எந்த மிருகத்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை. சிறிது நேரம் இங்கு இளைப்பாறிவிட்டு இருட்டுவதற்க்குள் விருந்தினர் மாளிகையை அடைவதற்காக கிளம்பிவிட்டோம். அப்படியும் மோசமான சாலையினால் ஹைவேவிஸை அடைய இரவு சுமார் 7.00 மணி ஆகிவிட்டது.முருகன் இரவு உணவாக சப்பாத்தி மற்றும் தக்காளி சட்னி தயார் செய்து அதை தங்குமிடத்திற்க்கே அனுப்பிவைத்தார்.

எங்களின் பார்வையில் மேகமலை
மேகமலை முழுவதும் பரவியிருக்கும் ஹைவேவிஸ் டீ எஸ்டேட்ஸ் <புரூக்பாண்ட்-BrookeBond-உட்பிரயார்-woodbrariar> குரூப்பைச் சேர்ந்ததாகும். இந்த மலையிலுள்ள நிலங்களை சுமார் 100 வருட குத்தகைக்கு அரசாங்கம் தேயிலை விளைவிக்க கம்பெனியாருக்கு கொடுத்திருப்பதாகவும் இன்னும் சில வருடங்களில் குத்தகை முடிவுக்கு வருவதாகவும் சொல்கிறார்கள். மேகமலைக்கு செல்லும் சாலைகளையும் அவர்கள்தான் பராமரிக்கிறார்கள். கம்பெனிக்கு சொந்தமில்லாத மற்ற இடங்கள் தமிழ்நாடு வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்திய கட்டிடங்களை தேயிலைத் தோட்டத்தின் நடுவே பார்க்கமுடிகிறது. எஸ்டேட் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் விருந்தினர் விடுதிகள் மிக நன்றாக நிர்வகிக்கப்பட்டாலும் அவற்றின் ஒருநாள் வாடகையாக ரூ.6000/-வசூலிக்கப்படுகிறது.

மேகமலையெங்கும் ஏரிகளும் ஆறுகளும் ஓடைகளும் நிறைந்துள்ளன. வெண்ணியாறு, மணலாறு மற்றும் இரவலங்காறு என்று அழைக்கிறார்கள். தூவானம் அணைக்கட்டு காட்டின் நடுவே கட்டப்பட்டுள்ளது.மேகமலையின் காடுகளை கடந்து மலைக்கு அந்தப்புறம் சென்றால் வெள்ளிமலை வருகிறது. யானைகள், கரடிகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், நரிகள் மற்றும் புலிகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வெள்ளிமலைக்கு வருஷநாடு, கடமலைகுண்டு, மயிலாடும்பாறை மற்றும் அரசடி வழியாக செல்லவேண்டும். போகும் வழியெங்கும் யானைகள் சென்ற தடங்களை பார்க்கலாம்.  மேகமலையின் பின்புற சரிவில் வெள்ளிமலை அமைந்துள்ளது. இங்கு வனத்துறையின் அனுமதியின்றி போய்வர முடியாது. பொதுமக்கள் போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது.இவ்விடத்திறிக்கு செல்லும் நடுவழியிலுள்ள சில சாலைகள் தனியார் எஸ்டேட் நிர்வாகத்திடம் உள்ளது. அவர்களின் அனுமதியின்றி மலையின் அவ்விடங்களுக்கு செல்வது முடியாது. அந்தப்புறம் சென்றால் வத்திராயிருப்பு, ஐயனார் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் சென்றுவிடலாம். மலையின் இன்னொரு வழி சபரிமலைக்கு செல்வதாக சொல்கிறார்கள்.

மேகமலையை சுற்றிப்பார்க்க வருபவர்களுக்குசரியான வசதிகள் இல்லை. கிடைக்கும் சொற்ப வசதிகளுக்கும் மிகவும் பணம் பிடுங்கி விடுகிறார்கள். கீழிருந்து தான் எல்லாம் வர வேண்டியுள்ளது. ஆனால் நல்ல காற்று ஆரோக்கியமான சுற்றுபுறம் மற்றும் நல்ல தண்ணீருக்காக இவையெல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளலாம்.

ஹோட்டல் முருகனின் மகன் அஜீத் இங்குள்ள சுற்றுலா இடங்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளான்.அவனின் துணையின்றி சிலஇடங்களுக்கு எங்களால் நிச்சயம் சென்றிருக்க முடியாது. அவன் இங்குள்ள கிராமத்து பள்ளியில் ஏழாவதுபடிக்கிறான். அவனுடைய வகுப்பில் மொத்தம் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை ஒனபது. இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்குசரியாக பாடம் கற்பிக்க வருவதில்லையாம்.

அவனுடைய தந்தை முருகன் இங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கு முடிந்த வசதிகள் செய்துதருகிறார். ஆனால் முழுவதும் வணிக கண்ணோட்டத்திலேயே செயல்படுகிறார். மேகமலைக்கு செல்ல நினைப்பவர்கள் இவரை தொடர்பு கொள்ளவும். இவரின் கைபேசி எண்.9442781748.

மேகமலைக்குச் செல்ல தேனி கம்பம்சாலையில் தேனியிலிருந்து சுமார் 22 கிலோமீட்டருளுள்ள சின்னமனூரில் இடதுபுரம் பிரியும் ஹைவேவிஸ் எஸ்டேட்ஸ் செல்லும் சாலையில் திரும்பவேண்டும்.3 கிலோமீட்டரில் வலதுபுறமாக பிரியும் கரடுமுரடான சாலையில் 40 கிலோமீட்டர் சென்றால் ஹைவேவிஸ் எஸ்டேட்ஸ் பஞ்சாயத்து விருந்தினர் மாளிகை வருகிறது. இந்த விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு முருகன் மூலமாக முன்பதிவு செய்வது மிகவும் அவசியம். இவ்விடத்திற்க்கு வருவதற்கு டெம்போ டிராவலர், சுமோ மற்றும் பொலிரோ போன்ற பெரிய வாகனங்கள் தான் உகந்தவை.