Pages

Friday, April 15, 2011

2010 MEGAMALA , MANJOLAI TOUR PROGRAM 2010 மேகமலை,மாஞ்சோலை பயணம் 21-10-2010


21-10-2010


காலை 7 மணிக்கு அறைகளை காலிசெய்துவிட்டு அம்பாசமுத்திரம் சென்றடைந்தோம். அம்பை ஹோட்டல் கெளரிசங்கரில் காலை டிபனை முடித்துக்கொண்டோம். கோர்ட் அருகிலிருந்த வனத்துறை அலுவலகத்தில் மாஞ்சோலையிலுள்ள குதிரைவெட்டியிலுள்ள விருந்தினர் மாளிகையில் அன்றிரவு தங்குவதற்க்கு வனத்துறை இயக்குனர் அலுவலத்தில் வாங்கியிருந்த அனுமதி கடிதத்தை காட்டி இரண்டு அறைகளுக்கு ரூபாய்.1500 கட்டினோம். வனத்துறை அலுவலகத்தில் வாங்கிய அனுமதி கடிதம் மற்றும் பனங்கட்டிய இரசீதையும் ஐந்தாறு நகல்கள் எடுத்துவைத்துக்கொண்டோம். கல்லிடைக்குறிச்சி வழியாகத்தான் மாஞ்சோலைக்கு செல்லமுடியும். அம்பாசமுத்திரத்திலிருந்து செல்லும்போது கல்லிடைக்குறிச்சி தாண்டியதும் வருகின்ற இரயில்வே கேட்டை கடந்து செல்லவேண்டும். மணிமுத்தாறு சிறப்புக் காவல் முகாமை கடந்து சென்றால் கோயிலொன்று வருகிறது. அங்கு இரண்டாக பிரியும் பாதையில் மலையை நோக்கி செல்லும் பாதையில் சென்றால் வனத்துறை செக்போஸ்ட் வருகிறது. அங்கு வனத்துறையிடமிருந்து இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்த அனுமதி கடிதத்தை வாங்கிக்கொள்கிறார்கள். வண்டி எண்ணை வனத்துறை பதிவேட்டில் பதிவுசெய்து கையெழுத்து போடச்சொல்கிறார்கள். இங்கிருந்து மலைப்பாதை ஆரம்பமாகிறது. வனத்தை இரசித்துக்கொண்டே பயணத்தைத்தொடர முதலில் வருவது மணிமுத்தாறு அருவி. அருவி பார்ப்பதற்க்கு சிறியதாகத் தோன்றினாலும் மிகமிக ஆழமான அபாயமான அருவி. அருவியில் குளிக்க அனுமதிக்கிறார்கள். அருவித்தண்ணீர் விழும் குளத்தில் குளிக்க அனுமதியில்லை. இங்கும் நிறைய குரங்குகள் உண்டு. மிகவும் கவனம் தேவை. சிறிது அருவியை இரசித்துவிட்டு கிளம்பினோம்.இந்த அருவியைத்தாண்டி மாஞ்சோலைக்குச் செல்ல வனத்துறையின் அனுமதி தேவை. அடுத்து 2 கிலோமீட்டரில் இன்னொரு செக்போஸ்ட் வருகிறது.அங்கும் பழையபடியே எல்லாம் கேட்கிறார்கள்.அடர்ந்த வனத்தில் பயணம் தொடர்கிறது. குறுகிய பாதை மிகவும் கவனத்துடன் செல்லவேண்டும். பழக்கமில்லாதவர்கள் இங்கு வாகனம் ஓட்டுவது இயலாத காரியம். மாஞ்சோலை வருகிறது.மிகவும் சிறிய ஊர்.போஸ்ட்ஆபிஸ் இங்கேயுள்ளது. ஒரு கடையுமுள்ளது. ஊரின் எல்லையில் தேயிலைத் தோட்டங்கள் ஆரம்பமாகின்றன். ஒரு தேயிலை பதப்படுத்தும் பேக்டரியும் அதன் அலுவலகமும் உள்ளன.அடுத்து வருவது காக்காச்சி என்ற ஊர். இங்கும் தேயிலைத் தோட்டங்கள். இங்கு இயற்கையான ஒரு கோல்ஃப் மைதானம் அமைந்துள்ளது. நாலுமுக்கு என்ற ஊர் இதையும் தாண்டி போனால் வருகிறது. இவ்விடத்தில் மணிமுத்தாறு டீ எஸ்டேட்டின் அலுவலகங்களும் பேக்டரியும் அமைந்துள்ளன. சென்னை மாருதி சர்வீஸ் மாஸ்டர்ஸில் பணிபுரியும் எங்கள் நண்பர் திரு.சின்னராஜ் அவர்களின் சொந்த ஊர் இந்த நாலுமுக்குதான்.அவரின் நண்பர் திரு.வில்ஸன் இந்த மணிமுத்தாறு டீ எஸ்டேட்டில் அலுவலக மேலாளராக பணிபுரிகிறார். அவரிடம் நாங்கள் தொடர்ந்து தொடர்புகொண்டு எங்களின் பயணத்திட்டத்தை தெரிவித்திருந்தோம்.அவரை தொடர்பு கொண்டபோது தெரிந்தது அவர் எவ்வளவு நெருக்கடியில் இருக்கிறார் என்பது. மறுநாள் தொழிலாளர்களுக்கு போனஸ் என்பதால் அவர் கணக்கு வழக்குகளில் மிகவும் பிஸியாக இருந்தார். இருந்தாலும் எங்களுக்கு நேரம் ஒதுக்கினார். அவரிடம் சிறிது நேரம் கலந்து பேசிவிட்டு கிளம்பினோம்.


இவ்விடத்தில் பாதை நான்காக பிரிகிறது.நேராக செல்லும் வழி ஊத்து வழியாக குதிரைவெட்டி செல்கிறது. இன்னொரு வழி நாலுமுக்கு கிராமத்திற்கு செல்கிறது. இங்கே சிறிய பஸ்நிலையம் உள்ளது மற்றும் போஸ்ட் ஆபீஸ் உள்ளது. இடப்பக்க பிரிவு கோதையாறு அணைக்கட்டுக்குப் போகிறது. இவ்விடத்தில் ஒரு சிறிய உணவகம் உள்ளது. முன்னரே சொல்லிவைத்திருந்ததால் எங்களுக்கு உணவு கிடைத்தது. உணவை முடித்துக்கொண்டு கோதையாற்றுக்கு கிளம்பினோம். எங்களின் அனுமதி கடிதம் குதிரைவெட்டி செல்லவும் அது செல்லும் வழியிலுள்ள இடங்களை காணமட்டும்தான் என்றும் கோதையாறு செல்ல மணிமுத்தாற்றிலுள்ள வன அலுவலகத்தில் தனியாக அனுமதி வாங்கவேண்டுமென்றும் தெரிந்துகொண்டோம். ஆனால் செக்போஸ்ட்டில் சிறிது பணம் கொடுத்தால் அனுமதி கிடைக்குமென்று கடைக்காரர் சொன்னதால் கோதையாற்றை நோக்கி கிளம்பினோம். சிறிய குறுகிய மண்சாலை நடுவே தண்ணீர் எங்கிருந்தோ ஓடிவருகிறது. தேயிலைத்தோட்டங்கள் வழியாக பயணம் தொடர்கிறது. இங்கு தேயிலைப்பறிப்பவர்களெல்லாம் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தங்க இடம் மட்டும் இலவசமாக எஸ்டேட் நிர்வாகத்தாரால் வழங்கப்படுகிறது. இந்த தேய்லைத்தோட்டங்களின் எல்லையில் காடு வருகிறது. கோதையாறு வன செக்போஸ்ட் வருகிறது. கோதையாறு அனுமதிக்கமுடியாது என்று மறுக்கிறார். அவரிடம் சிறிது உரையாடியபின் அனுமதி தருகிறார். வழிகாட்டிடவும் மற்றும் துணைக்கும் மாரிமுத்து என்ற வனக்காவலரையும் எங்களுடன் அனுப்பிவைக்கிறார். கோதையாறு நீர்மின்நிலையம் அருகே மற்றோரு காவல்சாவடி உள்ளது. மாரிமுத்துவை கண்டதும் கேள்வியின்றி கதவு திறக்கிறது. குட்டியாறு அணைக்கட்டு வழியாக வால்வு ஹௌவுஸ் எனப்படும் இடத்திற்க்கு சென்றோம். இங்கே அமைக்கப்பட்டுள்ள விஞ்ச் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை அணைக்கட்டை அடையலாம். இவ்விடத்தை இரு தமிழ்நாடு காவல்துறைச் சார்ந்த இரண்டு காவலர்கள் 24 மணி நேரமும் காவல் காக்கின்றனர். தண்ணீரின் அளவுக்கேற்ப வால்வு திறந்து மூடப்படுவதால் இவ்விடம் நீர்மின் உற்பத்திக்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு காவலுக்கிருந்த காவலர்கள் மிகவும் அன்புடன் எங்களுடன் உரையாடினார்கள். அவர்கள் வெளியுலகத்தை அங்கு வருபவர்கள் மூலமாக காண்கிறார்கள். சுற்றுலா இடமில்லாததால் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் வனகாவலர்கள் எப்பொழுதாவது எங்களைப்போல் வருபவர்கள் தவிர மற்றவர்கள் வருவதற்க்கு வாய்ப்பில்லை. அங்கிருந்து திரும்பும் வழியில் கோதையாறு அணையை கண்டு இரசித்தோம். மாரிமுத்து காட்டுக்குள் எங்களை சிறிது தூரம் நடத்தி கூட்டிச்சென்றார். அங்கு ஒரு முனையிலிருந்து பார்த்தபொழுது கீழே பெருஞ்சாணை அணை, பேச்சிப்பாறை அணை மற்றும் நெய்யாறு அணைகளை காணமுடிந்தது. இது முடிந்ததும் வனத்துறை சாவடியில் மாரிமுத்து இறக்கிவிட்டு அங்கிருந்த வாட்சரை எங்களுடன் நாலுமுக்குக்கு அழைத்து வந்தோம். பின்பு நாலுமுக்கிலிருந்து ஊத்து வழியாக குதிரைவெட்டிக்கு சென்றோம். ஊத்துவரை ஓரளவு சாலைகள் உள்ளன. ஊத்தில் வீடுகளுன்ன. ஒரு கடையும் உள்ளது. ஊத்தி மற்றும் சுற்றுவட்டாரத்தில் விளைவிக்கப்படும் தேயிலை மிகமிக உயர்ந்த தரமுடையது. இதை இயற்கை உரமிட்டு விளைவிக்கிறார்கள். ஊத்திலிருந்து காரின் டயர் போகும் அளவிற்க்குத்தான் சாலை உள்ளது. மிகமிக கவனத்துடன் சென்றோம். குதிரைவெட்டி மிகமிக சிறிய ஊர். தேயிலைத்தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்கள் இங்குள்ளனர். இந்த ஊர்வரை திருநெல்வேலி மற்றும் அம்பாசமுத்திரத்திலிருந்து பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த ஊரின் வாயிலிலே இடதுபுரம் உள்ளடங்கி ஒரு மேடான இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டதால் மிகவும் பொலிவுடன் விளங்குகிறது. சுற்றிலும் கண்ணாடி ஜன்னல்கள் உள்ளதால் நாலுபுறமும் இயற்கையை இரசிக்கவும் தவறுதலாக வரும் விலங்குகளை கண்டுகளிக்கவும் முடிகிறது. பக்கத்திலேயே காட்சி கோபுரம்(வாட்ச் டவர்) மற்றும் ஒயர்லெஸ் கோபுரமும் உள்ளது. வனகாவலர்கள் ஆறுமுகம் மற்றும் பரமசிவம் இங்கே பணியிலுள்ளனர். இருவரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார்கள். பரமசிவம் இங்கு வருபவர்களுக்கு சமையலும் செய்து தருகிறார். சமையல் பொருட்கள் எல்லாம் கீழிருந்துதான் வரவேண்டும். விருந்தினர்கள் வரும்பொழுது சமையல் செய்வதற்கான பொருட்களை வாங்கிவந்துவிட்டால் சமைத்துத்தருவது அவரின் பொறுப்பு. எங்களுக்கு இதெதுவும் தெரியாததால் நாங்கள் சமையல் பொருட்கள் வாங்கிச்செல்லவில்லை. அவரிடம் இரவுக்கு ஏதாவது சமைத்து தருமாறு கூறிவிட்டோம். இல்லாவிட்டால் பத்துகிலோமீட்டர் காட்டுவழியில் சென்று நாலுமூக்கிலுள்ள ராஜூ சேட்டனின் உணவகத்திற்க்கு சாப்பிடச்செல்லவேண்டும். இரவில் காட்டுவழி பயணம் மிகமிக ஆபத்தானது. பரமசிவம் எங்களை விருந்தினர் மாளிகையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திலுள்ள காட்சிகோபுரத்திற்க்கு கூட்டிச்சென்றார். அதன் உச்சியிலிருந்து பார்க்கையில் தாமிரபரணி உற்பத்தியாகும் பாணதீர்த்தம் என்றும் அருவியும் காரையாறு அணைக்கட்டு பகுதிகளும் தெரிகின்றது. நாங்கள் வந்த மலைப்பதையும் மணிமுத்தாறு அணைக்கட்டு, அருவியும் மற்றும் காக்காச்சி வளைவில் வண்டிகள் மலையேறிவருவதும் தெரிகிறது. குளிர்காற்று பிய்த்துக்கொண்டு போகிறது. தங்குமிடத்திற்க்கு திரும்பினோம். மாளிகையிலுள்ள ஏணியின் மூலமாக மொட்டை மாடிக்குச் சென்று சிறிது நேரம் உலவினோம். மாடியிலிருந்து என் கைபேசிக்கு சிக்னல் கிடைத்ததால் எல்லார் வீட்டுக்கு பேசினோம். பரமசிவம் எங்களுக்காக தயாரித்த சிறந்த சமையலை வயிறார உண்டோம். பின்பு இரவு 9.00 மணக்கு பரமசிவத்துடன் காட்டை சுற்றிப்பார்க்க கிளம்பினோம். பரம்சிவம் முன்னே டார்ச் வெளிச்சம் காட்டிக்கொண்டு செல்ல ஊத்துசாலையில் சுமார் 2 கிலோமீட்டர் நடந்தோம். இரவின் இருட்டில் சாலையின் கீழுள்ள சின்ன பள்ளத்தாக்குகளில் மிளாக்கள் மற்றும் காட்டெருமைகளின் கண்கள் இருட்டில் ஒளிருவதை காணமுடிந்தது. நடைபயணம் சென்று வந்ததால் நல்ல தூக்கம் வந்தது. சில காட்டுப்பன்றிகள் விருந்தினர் மாளிகையின் பின்புறம் வந்துபோவது தெரிந்தது. ஆனால் இருட்டில் சரியாக தெரியவில்லை.