Pages

Thursday, April 21, 2011

2010 MEGAMALA , MANJOLAI TOUR PROGRAM 2010 மேகமலை,மாஞ்சோலை பயணம் - 23-10-2010

Wednesday, April 20, 2011

2010 MEGAMALAI , MANJOLAI TOUR PROGRAM 2010 மேகமலை,மாஞ்சோலை பயணம் 18-10-2010

18-10-2010


காலை 7மணி மேகமலையிலிருந்து கிளம்புதல் வழியில் சுருளிஅருவி, வைகை அணைக்கட்டு,உசிலம்பட்டி மற்றும் பரையூர் வழியாக குற்றாலம் சென்று இரவு குற்றாலத்தில் தங்குதல்.

காலை 7.00 மணிக்கு மேகமலையிலிருந்து கிளம்பி சின்னமனூர், த்தமபாளையம், கம்பம் வழியாக சுருளி அருவியைச் சென்றடைந்தோம்.

காலை உணவை ஆளுக்கிரண்டு இளநீரோடு முடித்துக்கொண்டோம். சுருளிப்பட்டியிலிருந்து சுருளிஅருவி வரை சாலையின் இருமருங்கும் திராட்சை தோட்டங்கள் உள்ளன. ஒரு தோட்டத்தில் சுமார் 6 கிலோதிராட்சையை வாங்கி காரில் வைத்துக்கொண்டோம்.மூன்று நாட்கள் வரை வேண்டும்போது சாப்பிடுவதற்க்கு போதுமானதாக இருந்தது.சுருளி அருவியில் நீர்வரத்து குளிப்பதற்க்கு ஏற்ற வேகத்தில் இருந்தது.குளியல் முடித்து தேனிக்குபயணமானோம்.தேனியில் மதியஉணவை மாருதி உணவகத்தில் முடித்துவிட்டு நண்பர் பரமசிவம் எங்களிடம் பிரியாவிடை பெற்றார். தேனியிலிருந்து மதுரை செல்லும் வழியில் சுமார் 15 கிலோமீட்டரில் வைகை அணைக்கட்டு உள்ளது. சுமார் 2.30மணிக்கு வைகை அணைக்கட்டை அடைந்தோம். அணையின் மதகுகள் திறந்து தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. பூஞ்செடிகள், கொடிகள் மற்றும் மரங்களடர்ந்த பூங்காவினில் நடந்து செல்வது மனதுக்கு உவகைத்தந்தது.

வைகை அணைக்கட்டிலிருந்து ஆண்டிப்பட்டி,உசிலம்பட்டி, பரையூர் சென்றோம். பரையூர் பஸ் ஸ்டாண்ட்டிற்க்கு முன்னால் வலதுபுரம் திரும்பினால் சுப்பலாபுரம் வழியாக NH208-யைஅடையலாம். NH208-யில் வலதுபுரம் திரும்பி ஸ்ரீவில்லிபுத்தூரை சுமார் மாலை 6.30 மணிக்கு அடைந்தோம். வழக்கம்போல ஸ்ரீவில்லிபுத்தூரை கடக்கும்பொழுதெல்லாம் உணவருந்தும் ஆண்டாள் கோயில் பஸ்ஸ்டாப்புக்கு எதிரில் NH208 சாலையிலுள்ள கதிரவன் ஹோட்டலில் இரவு உணவை முடித்துக்கொண்டோம். 


ஓட்டல் கதிரவன்

நெடுஞ்சாலைகளில் ஹோட்டல்கள் நன்றாகஅமைவதில்லை என்பது பொது விதி.ஆனால் கதிரவன் இதற்க்கு விதிவிலக்கு. மிகச்சிறிய இடத்தையும் சிறப்பாக நிர்வகிக்கிறார்கள்.பதார்த்தங்களின் சுவையை சொல்வதற்க்கு வார்த்தைகளேயில்லை.பரிமாறுபவர்கள் அன்போடு எல்லாவற்றையும் பரிமாறுகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூரை கடந்து செல்பவர்கள் தயவு செய்து இங்கு உணவருந்தி செல்லவும். உணவருந்திய பின் இராஜபாளையம் வழியாக குற்றாலத்தை அடையும் பொழுது இரவு மணி 9.15. இணையதளம் மூலமாக தமிழ்நாடுசுற்றுலா விடுதியில்  இரண்டு அறைகள் முன்பதிவு செய்திருந்ததால் உடனே அறைகளுக்குச் சென்று களைப்பைபோக்க உறங்கச்சென்று விட்டோம்.

Tuesday, April 19, 2011

2010 MEGAMALAI , MANJOLAI TOUR PROGRAM 2010 மேகமலை,மாஞ்சோலை பயணம் 17-10-2010

17-10-2010-  காலை 7.00 மணி

மேகமலைக்கு ஹைவேவிஸ் எஸ்டேட்ஸ் கிளம்புதல். மேகமலை, வெண்ணியாறு, மணலாறு அருவிகள் மற்றும் அணைகளை சுற்றிப் பார்த்தல்இரவு தங்குதல் - மேகமலை

நண்பர் பரமசிவம் காலை 5.30 மணிக்கே வந்துவிட்டார். சின்னமனூர் செல்லும் வழியிலுள்ள மீனாட்சி ஹோட்டலில் காலை உணவை முடித்துக்கொண்டு சின்னமனூர் வழியாக கம்பம் செல்லும் சாலையில் பயணம் தொடங்கினோம். சின்னமனூர் சென்றதும் இடது பக்கம் ஹைவேவிஸ் எஸ்டேட்ஸ் செல்லும் பாதை பிரிகிறது. மலை கிராமங்கள் வழியாக செல்லும் மிகவும் சிறியசெம்மண் பாதை. ஹைவேவிஸ் செல்லும் மலைப்பாதை மிகவும் மோசமான நிலையிலுள்ளது. சிறிய வண்டிகள் செல்வது மிகவும் சிரமம். மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும். மிகுந்த சிரமத்துடன் காலை 10.00 மணிக்கு ஹைவேவிஸ் பஞ்சாயத்து அலுவலகத்தை அடைந்தோம். இந்த அலுவலகத்தின் முதல்தளம் தான் விருந்தினர் மாளிகை.

இந்த அலுவலகம் அழகிய ஒரு ஏரிக்கரையில்அமைந்துள்ளது. ஏரிக்கரையின் அக்கரை மரங்கள்டர்ந்த காட்டுப்பகுதி. இவ்வனப்பகுதியில் யானைகள், காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டெருமைகள் வசிக்கின்றன் எனவும் அவைகள் உணவுக்காகவும் மற்றும் தண்ணீருக்காகவும் இவ்விடத்திற்க்கு வருகை புரியும் என்றும் தெரிந்துகொண்டோம்.
          Highwavy's Guest House

















எங்களுக்கு முதல்தளத்தில் ஏரிக்கரையை ஒட்டிய இரண்டு அறைகளை தேனி நண்பர் பரமசிவம் அவர்கள் முன்பதிவு செய்திருந்தார். இந்த அலுவலகத்தைஒட்டி அலுவலக வளாகத்திலேயே திரு.முருகன் அவர்கள் உணவகம் வைத்திருக்கிறார். அவர்மூலம்தான் இங்குதங்க முன்பதிவு செய்யப்பட்டது. அவர்தான் இங்கு வருபவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்கிறார். இங்குள்ள ஒரே உணவகமும் இதுதான். வெறெங்கும் சாப்பிட கடைகளில்லை.


சிறிது ஒய்வுக்குப் பின் அறையிலிருந்து கீழிறங்கி ஏரிக்கரையோரமாய் சிறிதுநேரம் நடைபயின்றோம். கடைமுருகனின் மகன் அஜீத்தை அழைத்துக்கொண்டு தூவானம் அணைக்கட்டுக்குச் சென்றோம். இந்த இடத்திலிருந்துதான் சுருளி மின்நிலையத்திற்க்கு மின்சாரம் எடுக்க தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்பொழுது தண்ணீரின் வேகத்தால் தண்ணீர்த்துளிகள் தூவானம்போல் சுற்றிலும் தெறிக்கிறது. இந்த அணைக்கட்டு போகும் வழி இயற்கையின் அற்புதங்களிலொன்று. ஒவ்வொரு வளைவிலும் ஒவ்வொரு அழகு தெரிகிறது.

மதிய உணவை முருகன் அவர்களின் கடையில் முடித்துக்கொண்டோம். நல்ல அறுசுவை உணவென்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. கூட்டு, பொறியல், ரசம், சாம்பார், ஆம்லெட் என்றவரால் முடிந்தளவுக்கு அசத்திவிட்டார். அஜீத்தை மீண்டும் அழைத்துக்கொண்டு 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மகாராஜாமெட்டு என்ற இடத்திற்க்கு சென்றோம். இங்கிருந்து ஒருகோணத்தில் தேக்கடி நீர்தேக்கமும், இன்னொரு கோணத்தில் சுருளி நீர்தேக்கமும் தெரிகிறதுபசுமையான பள்ளத்தாக்குகள் வழியாக தண்ணீர்செல்வது தெரிகிறது. திரும்பிவரும் வழியில் சுருளிஅருவிக்கு தண்ணீர் தரும் இரவலங்காறு அணைக்கட்டைப் பார்த்தோம்.

பிறகு அப்பர் மணலாறு வழியாக வட்டப்பாறை என்றழைக்கப்படும் இடத்திற்க்குச் சென்றோம். இது சர்வசாதாரணமாக விலங்குகள் வந்துலவிச்செல்லும் இடமாம்இது மற்ற இடங்களைவிடமிகவும் குளிர்ச்சியாக உள்ளதுஇவ்விடத்தில் பகலிலேயே பனி சூழ்ந்துள்ளது. நாங்கள் காரை ஒரிடத்தில் நிறுத்திவிட்டு சிறிது தூரம் நடந்தோம்.இந்த இடம் மிக அருமையாக உள்ளது. ஆனால் எந்த மிருகத்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை. சிறிது நேரம் இங்கு இளைப்பாறிவிட்டு இருட்டுவதற்க்குள் விருந்தினர் மாளிகையை அடைவதற்காக கிளம்பிவிட்டோம். அப்படியும் மோசமான சாலையினால் ஹைவேவிஸை அடைய இரவு சுமார் 7.00 மணி ஆகிவிட்டது.முருகன் இரவு உணவாக சப்பாத்தி மற்றும் தக்காளி சட்னி தயார் செய்து அதை தங்குமிடத்திற்க்கே அனுப்பிவைத்தார்.

எங்களின் பார்வையில் மேகமலை
மேகமலை முழுவதும் பரவியிருக்கும் ஹைவேவிஸ் டீ எஸ்டேட்ஸ் <புரூக்பாண்ட்-BrookeBond-உட்பிரயார்-woodbrariar> குரூப்பைச் சேர்ந்ததாகும். இந்த மலையிலுள்ள நிலங்களை சுமார் 100 வருட குத்தகைக்கு அரசாங்கம் தேயிலை விளைவிக்க கம்பெனியாருக்கு கொடுத்திருப்பதாகவும் இன்னும் சில வருடங்களில் குத்தகை முடிவுக்கு வருவதாகவும் சொல்கிறார்கள். மேகமலைக்கு செல்லும் சாலைகளையும் அவர்கள்தான் பராமரிக்கிறார்கள். கம்பெனிக்கு சொந்தமில்லாத மற்ற இடங்கள் தமிழ்நாடு வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்திய கட்டிடங்களை தேயிலைத் தோட்டத்தின் நடுவே பார்க்கமுடிகிறது. எஸ்டேட் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் விருந்தினர் விடுதிகள் மிக நன்றாக நிர்வகிக்கப்பட்டாலும் அவற்றின் ஒருநாள் வாடகையாக ரூ.6000/-வசூலிக்கப்படுகிறது.

மேகமலையெங்கும் ஏரிகளும் ஆறுகளும் ஓடைகளும் நிறைந்துள்ளன. வெண்ணியாறு, மணலாறு மற்றும் இரவலங்காறு என்று அழைக்கிறார்கள். தூவானம் அணைக்கட்டு காட்டின் நடுவே கட்டப்பட்டுள்ளது.மேகமலையின் காடுகளை கடந்து மலைக்கு அந்தப்புறம் சென்றால் வெள்ளிமலை வருகிறது. யானைகள், கரடிகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், நரிகள் மற்றும் புலிகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வெள்ளிமலைக்கு வருஷநாடு, கடமலைகுண்டு, மயிலாடும்பாறை மற்றும் அரசடி வழியாக செல்லவேண்டும். போகும் வழியெங்கும் யானைகள் சென்ற தடங்களை பார்க்கலாம்.  மேகமலையின் பின்புற சரிவில் வெள்ளிமலை அமைந்துள்ளது. இங்கு வனத்துறையின் அனுமதியின்றி போய்வர முடியாது. பொதுமக்கள் போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது.இவ்விடத்திறிக்கு செல்லும் நடுவழியிலுள்ள சில சாலைகள் தனியார் எஸ்டேட் நிர்வாகத்திடம் உள்ளது. அவர்களின் அனுமதியின்றி மலையின் அவ்விடங்களுக்கு செல்வது முடியாது. அந்தப்புறம் சென்றால் வத்திராயிருப்பு, ஐயனார் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் சென்றுவிடலாம். மலையின் இன்னொரு வழி சபரிமலைக்கு செல்வதாக சொல்கிறார்கள்.

மேகமலையை சுற்றிப்பார்க்க வருபவர்களுக்குசரியான வசதிகள் இல்லை. கிடைக்கும் சொற்ப வசதிகளுக்கும் மிகவும் பணம் பிடுங்கி விடுகிறார்கள். கீழிருந்து தான் எல்லாம் வர வேண்டியுள்ளது. ஆனால் நல்ல காற்று ஆரோக்கியமான சுற்றுபுறம் மற்றும் நல்ல தண்ணீருக்காக இவையெல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளலாம்.

ஹோட்டல் முருகனின் மகன் அஜீத் இங்குள்ள சுற்றுலா இடங்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளான்.அவனின் துணையின்றி சிலஇடங்களுக்கு எங்களால் நிச்சயம் சென்றிருக்க முடியாது. அவன் இங்குள்ள கிராமத்து பள்ளியில் ஏழாவதுபடிக்கிறான். அவனுடைய வகுப்பில் மொத்தம் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை ஒனபது. இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்குசரியாக பாடம் கற்பிக்க வருவதில்லையாம்.

அவனுடைய தந்தை முருகன் இங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கு முடிந்த வசதிகள் செய்துதருகிறார். ஆனால் முழுவதும் வணிக கண்ணோட்டத்திலேயே செயல்படுகிறார். மேகமலைக்கு செல்ல நினைப்பவர்கள் இவரை தொடர்பு கொள்ளவும். இவரின் கைபேசி எண்.9442781748.

மேகமலைக்குச் செல்ல தேனி கம்பம்சாலையில் தேனியிலிருந்து சுமார் 22 கிலோமீட்டருளுள்ள சின்னமனூரில் இடதுபுரம் பிரியும் ஹைவேவிஸ் எஸ்டேட்ஸ் செல்லும் சாலையில் திரும்பவேண்டும்.3 கிலோமீட்டரில் வலதுபுறமாக பிரியும் கரடுமுரடான சாலையில் 40 கிலோமீட்டர் சென்றால் ஹைவேவிஸ் எஸ்டேட்ஸ் பஞ்சாயத்து விருந்தினர் மாளிகை வருகிறது. இந்த விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு முருகன் மூலமாக முன்பதிவு செய்வது மிகவும் அவசியம். இவ்விடத்திற்க்கு வருவதற்கு டெம்போ டிராவலர், சுமோ மற்றும் பொலிரோ போன்ற பெரிய வாகனங்கள் தான் உகந்தவை.

Monday, April 18, 2011

2010 MEGAMALAI , MANJOLAI TOUR PROGRAM 2010 மேகமலை,மாஞ்சோலை பயணம் 16-10-2010

கடந்த வருடங்களை போலவே இந்த வருடமும் மலையும் காடும் சார்ந்த இடங்களுக்கு சுற்றுலா செல்வதென முடிவெடுக்கப்பட்டது. சுற்றுலா செல்வதற்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டன. முதலில் தேனி அருகிலுள்ள மேகமலையில் ஆரம்பித்து அம்பாசமுத்திரம் அருகிலுள்ள மாஞ்சோலையில் முடிப்பதெனவும் இடையிலுள்ள சுற்றுலா முக்கியத்துவமுள்ள இடங்களையும் சுற்றுலாவில் சேர்த்துக்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

நண்பர்கள் (ரெங்கநாதன்(நான்),சுகுமார்,பாலகிருஷ்ணன் மற்றும் குமாரவேல்) கலந்துரையாடி பயணத்திட்டம் தயாரித்தோம்.


                             TEAM MEMBERS
BALAKRISHNAN,RANGANATHAN,SUKUMAR,KUMARAVEL
பாலகிருஷ்ணன்,ரெங்கநாதன்,சுகுமார் மற்றும் குமாரவேல்




TOUR VECHICLE ZEN ESTILO-2009 TN-20-BX-6300
இனிமையான பயணத்திற்கு உறுதுணையாக ஒத்துழைத்த கார்.



16-10-2010

காலை 7.00 மணி-பயணம் தொடங்குமிடம்-சென்னை
போரூர் அருகிலுள்ள சென்னை பைபாஸ் சுங்கச்சாவடி.
வழி - திருச்சி, திண்டுக்கல், பெரியகுளம். பெரியகுளம் அருகிலுள்ள கும்பகரை அருவி மற்றும் சோத்துப்பாறை அணையை பார்த்துவிட்டு
தேனி சென்று இரவு தங்குதல்

திட்டமிட்டபடி காலை 7.15 மணிக்கு போரூர் சென்னை பைபாஸ் சுங்கச்சாவடிக்கு சுகுமார் பாலகிருஷ்ணனையும் குமாரவேலையும் தன்னுடைய காரில் அழைத்துவந்துவிட,  அவர்களை என்னுடைய ஜென் எஸ்டிலோ காரில்(TN-20-BX-6300) ஏற்றிக்கொள்ள இனிய பயணம் தொடங்கியது.

சுமார் 10.30 மணிக்கு திருச்சி சென்றடைந்தோம்.காலையிலிருந்தே யணத்தின் ஈர்ப்பில் எதுவுமே சாப்பிடாததால் திருச்சிக்கு வரும்பொழுதெல்லாம் சாப்பிடும் வழக்கமான ஒட்டல் மதுரா விலாஸைத் தேடி மலைக்கோட்டை அருகிலுள்ள ஆண்டாள் தெருவுக்கு வந்தபொழுது ஆயுதபூஜையின் விடுமுறை காரணமாக மூடியிருந்த ஒட்டலைக் கண்டு ஏமாற்றமடைந்தோம். மனதைத் தேற்றிக் கொண்டு திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள சங்கீதாவிற்க்குச் சென்றோம்.

மதிய உணவை சங்கீதாவில் முடித்து திண்டுக்கல்,பெரியகுளம் வழியாக தேனிக்கு பயணம் தொடர்ந்தோம். பெரியகுளம் போகும் வழியில் பெரியகுளத்துக்கு 7 கிலோமீட்டர் இருக்கும்பொழுது வலதுபக்கம் கும்பக்கரை அருவிக்கு செல்லும் பாதை பிரிகிறது. இருபக்கமும் பாக்கு மரங்கள் சூழ்ந்த அழகிய பாதையில் சுமார் 5 கிலோமீட்டர் சென்றதும் கும்பக்கரை அருவிக்கரை வருகிறது. நாங்கள் சென்றபொழுது அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அருவிக்கருகே செல்வதற்கு வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.பாறைகள் வழியாக அருவி சிற்றாறுபோல வழிந்தோடி வருகின்ற இடத்தில் குளியலை முடித்தோம்.

அங்கிருந்து பெரியகுளம் நோக்கி செல்கையில் பெரியகுளத்துக்கு 2 கிலோமீட்டருக்கு முன்னால் சோத்துப்பாறை அணைக்குச் செல்லும் வழி வலதுபுரத்தில் பிரிந்து செல்கிறது. ஆற்றோரமாய் செல்லும் பாதையில் சுமார் 10 கிலோமீட்டர் சென்றதும் மலைகளின் நடுவே அணைக்கட்டு தெரிகிறது. சோத்துப்பாறை அணைக்கட்டு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் குன்றுகளின் நடுவே வராகநதியின் மேல் அமைந்துள்ளது. நாங்கள் அதை சென்றடையும்பொழுது மாலை 6 மணியாகிவிட்டது. அணைக்கட்டுக்குள் போய்வர அனுமதியில்லாததால் அணைக்கட்டின் உச்சிவரை காரிலேயே சென்று அணைக்கட்டின் அழகை ரசித்தோம்.

பெரியகுளத்திலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தேனியை சுமார் 8 மணிக்கு அடைந்தோம். எங்களின் தேனி நண்பர் திரு.பரமசிவம் மூலம் முன்னரே பதிவுசெய்திருந்த பஸ்ஸ்டாண்ட் அருகிலுள்ள எவரஸ்ட் லாட்ஜில் அன்றிரவு தங்கினோம்.இரவு உணவை அருகிலுள்ள மாருதி(தேனியில் ஒரளவு சுமாரான) ரெஸ்டாரண்டில் முடித்துக்கொண்டோம்.

Sunday, April 17, 2011

2010 MEGAMALAI , MANJOLAI TOUR PROGRAM 2010 மேகமலை,மாஞ்சோலை பயணம் 19-10-2010

19-10-2010

குற்றாலத்திலிருந்து புறப்படுதல்.பெரிய அருவியில் குளித்துவிட்டு, பழைய அருவிக்கு சென்றுவிட்டு, அம்பாசமுத்திரத்தில் வனத்துறை இயக்குனர் அலுவலத்தில் மாஞ்சோலை குதிரைவெட்டியிலுள்ள வனத்துறை விருந்தினர் மாளிகையில் 21-10-2010 தங்குவதற்க்கு அனுமதி கடிதம் பெற்றுக் கொண்டு கன்னியாகுமரிக்கு மாலைக்குள் சென்று அன்றிரவு அங்கே தங்கிடதிட்டமிட்டிருந்தோம்.

காலை 6.30 க்கு பெரிய அருவிக்கு சென்றோம். பாலகிருஷ்ணணும் குமாரவேலும் சுமார் 1-1/2 மணிநேரம் குளித்தனர். சுகுமாரும் நானும் துணிகளுக்கு காவலிருந்தோம். துணிமூட்டையை உணவு பொட்டலம் என்று நினைத்த குரங்கொன்று அதையெடுக்க பாய்ந்து வந்தது. அதை தடுக்க முயற்சித்தபோது சுகுமாரின் கையில் கீறிவிட்டது.நல்லவேலை சிறிய காயத்துடன் தப்பினான். குற்றாலத்தில் குரங்குகள் தொந்தரவு மிகவும் அதிகம். மிகவும் கவனமுடன் இருக்கவும்.

பின்பு பழைய குற்றால அருவிக்கு சென்றோம். குற்றாலத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. குற்றாலத்திலிருந்து 4வது கிலோமீட்டரில் அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் வலதுபுரம் பிரிந்து செல்லும் கிளைச்சாலையில் 3 கிலோமீட்டர் சென்றால் இந்த அருவியை அடையலாம். மிகவும் அமைதியான குளியலுக்கு ஏற்றவிடம்.போகும் வழியிலெல்லாம் பண்ணைவீடுகள் உள்ளன.

இங்கிருந்து கிளம்பி பொட்டல்புதூர் மற்றும் ஆழ்வர்குறிச்சி வழியாகசுமார் 35 கிலோமீட்டரிலுள்ள அம்பாசமுத்திரத்தை காலை 10.30 மணிக்கு அடைந்தோம். அம்பாசமுத்திரம் முக்கூடல் சாலையில் பஞ்சாயத்து யூனியன் ஆபிஸ் எதிரிலுள்ள வனச்சரகர் இயக்குனர் அலுவலத்தில் குதிரைவெட்டி விருந்தினர் மாளிகையில் 21-10-2010 தங்குவதற்க்கு கடிதம் பெற்றுக்கொன்டோம். ஒருநாள் தங்க ஒரு றைக்கு ரூ.750 ஆகிறது. கடிதத்தை அம்பாசமுத்திரம் நீதிமன்றம் அருகிலுள்ள வனச்சரகர் அலுவலத்திலுள்ள ரேஞ்சரிடம் காட்டி பணம் கட்டி ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். என்று அனுமதியுள்ளதோ அன்றுதான் பணம் கட்ட முடியும் ரேஞ்சர் திரு.ஆறுமுகம் கறாராக சொல்லிவிட்டதால் வேறுவழியின்றி அருகிலுள்ள அம்பையிலுள்ள ஓரே நல்ல சைவ ஹோட்டல் கெளரிசங்கரில் <தங்கும் வசதியுடன்>  மதிய உணவருந்திவிட்டு சேரன்மாதேவி,களக்காடு,பனகுடி வழியாக 80 கிலோமீட்டரிலுள்ள கன்னியாகுமரியை சுமார் 1.30 மணிக்கு அடைந்தோம்.

கன்னியாகுமரியில் ஹோட்டல் திரிவேணியில் இணயத்தின் மூலமாக முன்பதிவு செய்திருந்தோம். காரை ஹோட்டல் பார்க்கிங்கிலேயே நிறுத்திவிட்டு விவேகானந்தர் பாறைக்குச் செல்ல படகுத்துறைக்குச் சென்றோம். முதலில் விவேகானந்தர் பாறைக்கு படகில் சென்றோம். பாறையை சுற்றிவந்து தியான மண்டபத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு அங்கிருந்து  திருவள்ளூர்சிலை அமைக்கப்பட்டுள்ள பாறைக்கு படகில் கிளம்பினோம். சூரிய அஸ்மனத்தை அங்கேயே இரசித்துவிட்டு மாலை 6.30 மணிக்கு வந்த கடைசி படகில் கரைக்கு திரும்பினோம்.

கடற்கரை அருகிலுள்ள பகவதியம்மன் கோயில் மற்றும் சுனாமி நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ள பூங்காவைப் பார்த்துவிட்டு இரவு உணவை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பினோம்.

Saturday, April 16, 2011

2010 MEGAMALA , MANJOLAI TOUR PROGRAM 2010 மேகமலை,மாஞ்சோலை பயணம் 20-10-2010

20-10-2010

பத்மனாபபுரம் அரண்மணை, மாத்தூர் தொட்டிப்பாலம் மற்றும் திற்பரப்பு அருவி - இரவு அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கல்லிடைகுறிச்சியில் தங்குதல்.
எங்களுக்கு தங்குவதற்க்கு மூன்றாவது மாடியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. சூரிய உதயத்தை நன்கு பார்த்து ரசிக்க வசதியாக வங்காள விரிகுடாவை நோக்கி கிழக்குமுகமாக அறை அமைந்துருந்தது. காலை 5.30 மணிக்கு தொலைபேசி மூலமாக ஹோட்டல் வரவேர்பாளர் எங்களை சூரியயுதயம் காண எழுப்பினார். நானும் சுகுமாரும் அறையிலிருந்தே சூரியயுதயத்தை கண்டோம். குமாரவேலும், பாலகிருஷ்ணனும் மாடியிலிருந்து உதயத்தை ரசித்தனர்.

காலை டிபனை முடித்து அறையை காலிசெய்துவிட்டு கிளம்பினோம். சுசீந்தரம் ஸ்தாணு மலையன் கோயில் கன்யாகுமரியிலிருந்து சுமார் 13 கிலோமீட்டரில் நாகர்கோயில் போகும் வழியிலுள்ளது. குமாரவேல் மட்டும் கோயிலுக்கு சென்றுவந்தார். பின்பு பதமானாபபுரம் அரண்மணையை நோக்கி பயணித்தோம். பதமனாபபுரம்அரண்மணைக்கு நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் தக்கலை எம்ஜியார் சிலையருகில் வலதுபுரம் திரும்பவேண்டும். இந்த அரண்மணை சுமார் 460 வருடங்கள் பழமையானது. 16-ஆம் நூற்றாண்டில் அரசாண்ட மார்ததண்ட மன்னர்கள் வசித்த இடமாகும். முழுவதும் தேக்கு மரத்தில் பூவேலைசெய்துள்ளனர். ஒவ்வொரு சித்திரமும் கதை சொல்கிறது. 6.5 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள அரண்மணையின் சிறப்பை விளக்கிக்கூறுவதற்க்கு ஆங்காங்கே பெண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு எல்லைக்குள் இவ்விடம் அமைந்திருந்தாலும் இந்த அரண்மணை இருக்கும் இடமும் இதன் பராமரிப்பும் கேரள அரசிடம் உள்ளது. திங்கட்கிழமை மட்டும் அரண்மணைக்கு விடுமுறை. காலை 9.00-மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரையிலும் மற்றும் மதியம் 2.00 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரையிலும் அரண்மணையை பார்வையிட அனுமதிக்கிறார்கள்.


இது மிகப் பழமையான கேரளத்து ஓட்டு வீடு பாணியில் இருக்கிறது. அதன் பழமையை அப்படியே பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். அந்த அரண்மணையினுள் சென்றால், வெளியே வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. விருந்தாளிகள் அறை, நவராத்திரி மண்டபம், சமையல் அறை, சாப்பாட்டு அறை, மகாராணியின் ஒப்பனை அறை, அந்தபுரம் என்று ஏகப்பட்ட அறைகள். ஒவ்வொரு அறையிலும் ஒரு ஊழியரும் நின்று நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். சுற்றுலாத் துறை இங்கே தன் வேலையை நன்றாகச் செய்திருக்கிறது. நுனுக்கமான மர வேலைப்பாடுகள் கண்ணைக் கவருகின்றன. ஒரே பலா மரத்தில் செய்யப்பட்ட அழகான தூண், 64 மூலிகை மரங்களினால் செய்யப்பட்ட கட்டில், இன்றும் சரியான நேரம் காட்டிக்கொண்டிருக்கும் 300 வருட பழமையான கடிகாரம், மிக அரிய ஓவியங்கள் என்று இந்த அரண்மணையில் சுவாரசியமான விசயங்கள் நிறைய இருக்கின்றன. மர வேலைப்பாடுகள், வித விதமான விளக்குகள் என்று கேரளாவின் பாரம்பரியம் மொத்தமும் இங்கே கொட்டிக்கிடக்கின்றது.காலை 9 மணிக்குத் திறக்கிறார்கள். அப்போதே சென்று பார்த்துவிடுங்கள். உச்சி வெயில் நேரத்தில் சென்றீர்கள் என்றால் சிரமப்படுவீர்கள்.

மதிய உணவுக்கு அங்கிருந்த ஒரளவு சுமாரான ஹோட்டலில் உணவுப்பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு அங்கிருந்து சுமார் பதினான்கு கிலோமீட்டரிலுள்ள மாத்தூர் தொட்டிப்பாலதுக்குச் சென்றோம். இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இப்படி மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது. கணியான் என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது.தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.



இந்த அருவி குலசேகரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் கோதையாறு தான் இங்கு அருவியாக கொட்டுகிறது. கோயிலை ஒட்டிச் செல்லும் பாதையில் சென்றால் சிறிய அணைக்கட்டு உள்ளது. கோதையாறு இவ்விடத்தில் தேக்கிவைக்கப்படுகிறது. இவ்விடத்தில் படகு சவாரியும் செல்லலாம். இவ்விடத்திலிருந்து பாறைகளின் வழியே பயணிக்கும் ஆறு பாறையிலிருந்து 50 அடி உயரத்திலிருந்து அருவியாய் குதிக்கிறது. இதுவே திற்பரப்பு அருவியாகும். பாலகிருஷ்ணனும், குமாரவேலுவும் அருவியில் குளித்து புத்துணர்ச்சி பெற்றார்கள். நானும் சுகுமாரும் அவர்களைப்பார்த்து புத்துணர்ச்சி பெற்றொம்.


குலசேகரம் தக்கலை வழியாக நாகர்கோயிலுக்கு வரும் வழியில் நாகர்கோயிலுக்கு சுமார் 5 கிலோமீட்டரில் திருநெல்வேலி செல்ல பாதை பிரிகிறது. ஆரல்வாய்மொழி தாண்டியதும் காவல்கிணறில் எண்எச்7 பைபாஸில் பயணம் தொடர்ந்திடவேண்டும். பின்பு நாங்குநேரிக்கு செல்லும் வழியில் திரும்பி இடது பக்கத்தில் பிரியும் களக்காடு,திருகுறுங்குடி மற்றும் சேரன்மாதேவி வழியாக அம்பாசமுத்திரத்திற்க்கு செல்லும் சாலையில் அம்பாசமுத்திரத்திற்க்கு 2 கிலோமீட்டரிலுள்ள கல்லிடைக்குறிச்சியை அடைந்தபோது இரவு மணி 7.00. ஹோட்டல் பாஸ்கர் லாட்ஜில் அறைகள் முன்பதிவு செய்திருந்தோம். கோயிலுக்கு அருகிலுள்ள சிறிய உணவகத்தில் இரவு உணவாக இட்லிகளை வாங்கிகொண்டு அறைக்குத் திரும்பினோம்.


குலசேகரம் தக்கலை வழியாக நாகர்கோயிலுக்கு வரும் வழியில் நாகர்கோயிலுக்கு சுமார் 5 கிலோமீட்டரில் திருநெல்வேலிக்கு பாதை பிரிகிறது. ஆரல்வாய்மொழி தாண்டியதும் காவல்கிணறில் எண்எச்7 பைபாஸில் பயணம் தொடர்ந்திடவேண்டும். பின்பு நாங்குநேரிக்கு செல்லும் வழியில் திரும்பி இடது பக்கத்தில் பிரியும் களக்காடு,திருகுறுங்குடி மற்றும் சேரன்மாதேவி வழியாக அம்பாசமுத்திரத்திற்க்கு செல்லும் சாலையில் அம்பாசமுத்திரத்திற்க்கு 2 கிலோமீட்டரிலுள்ள கல்லிடைக்குறிச்சியை அடைந்தபோது இரவு மணி 7.00. ஹோட்டல் பாஸ்கர் லாட்ஜில் அறைகள் முன்பதிவு செய்திருந்தோம். கோயிலுக்கு அருகிலுள்ள சிறிய உணவகத்தில் இரவு உணவாக இட்லிகளை வாங்கிகொண்டு அறைக்குத் திரும்பினோம்.

Friday, April 15, 2011

2010 MEGAMALA , MANJOLAI TOUR PROGRAM 2010 மேகமலை,மாஞ்சோலை பயணம் 21-10-2010


21-10-2010


காலை 7 மணிக்கு அறைகளை காலிசெய்துவிட்டு அம்பாசமுத்திரம் சென்றடைந்தோம். அம்பை ஹோட்டல் கெளரிசங்கரில் காலை டிபனை முடித்துக்கொண்டோம். கோர்ட் அருகிலிருந்த வனத்துறை அலுவலகத்தில் மாஞ்சோலையிலுள்ள குதிரைவெட்டியிலுள்ள விருந்தினர் மாளிகையில் அன்றிரவு தங்குவதற்க்கு வனத்துறை இயக்குனர் அலுவலத்தில் வாங்கியிருந்த அனுமதி கடிதத்தை காட்டி இரண்டு அறைகளுக்கு ரூபாய்.1500 கட்டினோம். வனத்துறை அலுவலகத்தில் வாங்கிய அனுமதி கடிதம் மற்றும் பனங்கட்டிய இரசீதையும் ஐந்தாறு நகல்கள் எடுத்துவைத்துக்கொண்டோம். கல்லிடைக்குறிச்சி வழியாகத்தான் மாஞ்சோலைக்கு செல்லமுடியும். அம்பாசமுத்திரத்திலிருந்து செல்லும்போது கல்லிடைக்குறிச்சி தாண்டியதும் வருகின்ற இரயில்வே கேட்டை கடந்து செல்லவேண்டும். மணிமுத்தாறு சிறப்புக் காவல் முகாமை கடந்து சென்றால் கோயிலொன்று வருகிறது. அங்கு இரண்டாக பிரியும் பாதையில் மலையை நோக்கி செல்லும் பாதையில் சென்றால் வனத்துறை செக்போஸ்ட் வருகிறது. அங்கு வனத்துறையிடமிருந்து இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்த அனுமதி கடிதத்தை வாங்கிக்கொள்கிறார்கள். வண்டி எண்ணை வனத்துறை பதிவேட்டில் பதிவுசெய்து கையெழுத்து போடச்சொல்கிறார்கள். இங்கிருந்து மலைப்பாதை ஆரம்பமாகிறது. வனத்தை இரசித்துக்கொண்டே பயணத்தைத்தொடர முதலில் வருவது மணிமுத்தாறு அருவி. அருவி பார்ப்பதற்க்கு சிறியதாகத் தோன்றினாலும் மிகமிக ஆழமான அபாயமான அருவி. அருவியில் குளிக்க அனுமதிக்கிறார்கள். அருவித்தண்ணீர் விழும் குளத்தில் குளிக்க அனுமதியில்லை. இங்கும் நிறைய குரங்குகள் உண்டு. மிகவும் கவனம் தேவை. சிறிது அருவியை இரசித்துவிட்டு கிளம்பினோம்.இந்த அருவியைத்தாண்டி மாஞ்சோலைக்குச் செல்ல வனத்துறையின் அனுமதி தேவை. அடுத்து 2 கிலோமீட்டரில் இன்னொரு செக்போஸ்ட் வருகிறது.அங்கும் பழையபடியே எல்லாம் கேட்கிறார்கள்.அடர்ந்த வனத்தில் பயணம் தொடர்கிறது. குறுகிய பாதை மிகவும் கவனத்துடன் செல்லவேண்டும். பழக்கமில்லாதவர்கள் இங்கு வாகனம் ஓட்டுவது இயலாத காரியம். மாஞ்சோலை வருகிறது.மிகவும் சிறிய ஊர்.போஸ்ட்ஆபிஸ் இங்கேயுள்ளது. ஒரு கடையுமுள்ளது. ஊரின் எல்லையில் தேயிலைத் தோட்டங்கள் ஆரம்பமாகின்றன். ஒரு தேயிலை பதப்படுத்தும் பேக்டரியும் அதன் அலுவலகமும் உள்ளன.அடுத்து வருவது காக்காச்சி என்ற ஊர். இங்கும் தேயிலைத் தோட்டங்கள். இங்கு இயற்கையான ஒரு கோல்ஃப் மைதானம் அமைந்துள்ளது. நாலுமுக்கு என்ற ஊர் இதையும் தாண்டி போனால் வருகிறது. இவ்விடத்தில் மணிமுத்தாறு டீ எஸ்டேட்டின் அலுவலகங்களும் பேக்டரியும் அமைந்துள்ளன. சென்னை மாருதி சர்வீஸ் மாஸ்டர்ஸில் பணிபுரியும் எங்கள் நண்பர் திரு.சின்னராஜ் அவர்களின் சொந்த ஊர் இந்த நாலுமுக்குதான்.அவரின் நண்பர் திரு.வில்ஸன் இந்த மணிமுத்தாறு டீ எஸ்டேட்டில் அலுவலக மேலாளராக பணிபுரிகிறார். அவரிடம் நாங்கள் தொடர்ந்து தொடர்புகொண்டு எங்களின் பயணத்திட்டத்தை தெரிவித்திருந்தோம்.அவரை தொடர்பு கொண்டபோது தெரிந்தது அவர் எவ்வளவு நெருக்கடியில் இருக்கிறார் என்பது. மறுநாள் தொழிலாளர்களுக்கு போனஸ் என்பதால் அவர் கணக்கு வழக்குகளில் மிகவும் பிஸியாக இருந்தார். இருந்தாலும் எங்களுக்கு நேரம் ஒதுக்கினார். அவரிடம் சிறிது நேரம் கலந்து பேசிவிட்டு கிளம்பினோம்.


இவ்விடத்தில் பாதை நான்காக பிரிகிறது.நேராக செல்லும் வழி ஊத்து வழியாக குதிரைவெட்டி செல்கிறது. இன்னொரு வழி நாலுமுக்கு கிராமத்திற்கு செல்கிறது. இங்கே சிறிய பஸ்நிலையம் உள்ளது மற்றும் போஸ்ட் ஆபீஸ் உள்ளது. இடப்பக்க பிரிவு கோதையாறு அணைக்கட்டுக்குப் போகிறது. இவ்விடத்தில் ஒரு சிறிய உணவகம் உள்ளது. முன்னரே சொல்லிவைத்திருந்ததால் எங்களுக்கு உணவு கிடைத்தது. உணவை முடித்துக்கொண்டு கோதையாற்றுக்கு கிளம்பினோம். எங்களின் அனுமதி கடிதம் குதிரைவெட்டி செல்லவும் அது செல்லும் வழியிலுள்ள இடங்களை காணமட்டும்தான் என்றும் கோதையாறு செல்ல மணிமுத்தாற்றிலுள்ள வன அலுவலகத்தில் தனியாக அனுமதி வாங்கவேண்டுமென்றும் தெரிந்துகொண்டோம். ஆனால் செக்போஸ்ட்டில் சிறிது பணம் கொடுத்தால் அனுமதி கிடைக்குமென்று கடைக்காரர் சொன்னதால் கோதையாற்றை நோக்கி கிளம்பினோம். சிறிய குறுகிய மண்சாலை நடுவே தண்ணீர் எங்கிருந்தோ ஓடிவருகிறது. தேயிலைத்தோட்டங்கள் வழியாக பயணம் தொடர்கிறது. இங்கு தேயிலைப்பறிப்பவர்களெல்லாம் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தங்க இடம் மட்டும் இலவசமாக எஸ்டேட் நிர்வாகத்தாரால் வழங்கப்படுகிறது. இந்த தேய்லைத்தோட்டங்களின் எல்லையில் காடு வருகிறது. கோதையாறு வன செக்போஸ்ட் வருகிறது. கோதையாறு அனுமதிக்கமுடியாது என்று மறுக்கிறார். அவரிடம் சிறிது உரையாடியபின் அனுமதி தருகிறார். வழிகாட்டிடவும் மற்றும் துணைக்கும் மாரிமுத்து என்ற வனக்காவலரையும் எங்களுடன் அனுப்பிவைக்கிறார். கோதையாறு நீர்மின்நிலையம் அருகே மற்றோரு காவல்சாவடி உள்ளது. மாரிமுத்துவை கண்டதும் கேள்வியின்றி கதவு திறக்கிறது. குட்டியாறு அணைக்கட்டு வழியாக வால்வு ஹௌவுஸ் எனப்படும் இடத்திற்க்கு சென்றோம். இங்கே அமைக்கப்பட்டுள்ள விஞ்ச் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை அணைக்கட்டை அடையலாம். இவ்விடத்தை இரு தமிழ்நாடு காவல்துறைச் சார்ந்த இரண்டு காவலர்கள் 24 மணி நேரமும் காவல் காக்கின்றனர். தண்ணீரின் அளவுக்கேற்ப வால்வு திறந்து மூடப்படுவதால் இவ்விடம் நீர்மின் உற்பத்திக்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு காவலுக்கிருந்த காவலர்கள் மிகவும் அன்புடன் எங்களுடன் உரையாடினார்கள். அவர்கள் வெளியுலகத்தை அங்கு வருபவர்கள் மூலமாக காண்கிறார்கள். சுற்றுலா இடமில்லாததால் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் வனகாவலர்கள் எப்பொழுதாவது எங்களைப்போல் வருபவர்கள் தவிர மற்றவர்கள் வருவதற்க்கு வாய்ப்பில்லை. அங்கிருந்து திரும்பும் வழியில் கோதையாறு அணையை கண்டு இரசித்தோம். மாரிமுத்து காட்டுக்குள் எங்களை சிறிது தூரம் நடத்தி கூட்டிச்சென்றார். அங்கு ஒரு முனையிலிருந்து பார்த்தபொழுது கீழே பெருஞ்சாணை அணை, பேச்சிப்பாறை அணை மற்றும் நெய்யாறு அணைகளை காணமுடிந்தது. இது முடிந்ததும் வனத்துறை சாவடியில் மாரிமுத்து இறக்கிவிட்டு அங்கிருந்த வாட்சரை எங்களுடன் நாலுமுக்குக்கு அழைத்து வந்தோம். பின்பு நாலுமுக்கிலிருந்து ஊத்து வழியாக குதிரைவெட்டிக்கு சென்றோம். ஊத்துவரை ஓரளவு சாலைகள் உள்ளன. ஊத்தில் வீடுகளுன்ன. ஒரு கடையும் உள்ளது. ஊத்தி மற்றும் சுற்றுவட்டாரத்தில் விளைவிக்கப்படும் தேயிலை மிகமிக உயர்ந்த தரமுடையது. இதை இயற்கை உரமிட்டு விளைவிக்கிறார்கள். ஊத்திலிருந்து காரின் டயர் போகும் அளவிற்க்குத்தான் சாலை உள்ளது. மிகமிக கவனத்துடன் சென்றோம். குதிரைவெட்டி மிகமிக சிறிய ஊர். தேயிலைத்தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்கள் இங்குள்ளனர். இந்த ஊர்வரை திருநெல்வேலி மற்றும் அம்பாசமுத்திரத்திலிருந்து பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த ஊரின் வாயிலிலே இடதுபுரம் உள்ளடங்கி ஒரு மேடான இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டதால் மிகவும் பொலிவுடன் விளங்குகிறது. சுற்றிலும் கண்ணாடி ஜன்னல்கள் உள்ளதால் நாலுபுறமும் இயற்கையை இரசிக்கவும் தவறுதலாக வரும் விலங்குகளை கண்டுகளிக்கவும் முடிகிறது. பக்கத்திலேயே காட்சி கோபுரம்(வாட்ச் டவர்) மற்றும் ஒயர்லெஸ் கோபுரமும் உள்ளது. வனகாவலர்கள் ஆறுமுகம் மற்றும் பரமசிவம் இங்கே பணியிலுள்ளனர். இருவரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார்கள். பரமசிவம் இங்கு வருபவர்களுக்கு சமையலும் செய்து தருகிறார். சமையல் பொருட்கள் எல்லாம் கீழிருந்துதான் வரவேண்டும். விருந்தினர்கள் வரும்பொழுது சமையல் செய்வதற்கான பொருட்களை வாங்கிவந்துவிட்டால் சமைத்துத்தருவது அவரின் பொறுப்பு. எங்களுக்கு இதெதுவும் தெரியாததால் நாங்கள் சமையல் பொருட்கள் வாங்கிச்செல்லவில்லை. அவரிடம் இரவுக்கு ஏதாவது சமைத்து தருமாறு கூறிவிட்டோம். இல்லாவிட்டால் பத்துகிலோமீட்டர் காட்டுவழியில் சென்று நாலுமூக்கிலுள்ள ராஜூ சேட்டனின் உணவகத்திற்க்கு சாப்பிடச்செல்லவேண்டும். இரவில் காட்டுவழி பயணம் மிகமிக ஆபத்தானது. பரமசிவம் எங்களை விருந்தினர் மாளிகையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திலுள்ள காட்சிகோபுரத்திற்க்கு கூட்டிச்சென்றார். அதன் உச்சியிலிருந்து பார்க்கையில் தாமிரபரணி உற்பத்தியாகும் பாணதீர்த்தம் என்றும் அருவியும் காரையாறு அணைக்கட்டு பகுதிகளும் தெரிகின்றது. நாங்கள் வந்த மலைப்பதையும் மணிமுத்தாறு அணைக்கட்டு, அருவியும் மற்றும் காக்காச்சி வளைவில் வண்டிகள் மலையேறிவருவதும் தெரிகிறது. குளிர்காற்று பிய்த்துக்கொண்டு போகிறது. தங்குமிடத்திற்க்கு திரும்பினோம். மாளிகையிலுள்ள ஏணியின் மூலமாக மொட்டை மாடிக்குச் சென்று சிறிது நேரம் உலவினோம். மாடியிலிருந்து என் கைபேசிக்கு சிக்னல் கிடைத்ததால் எல்லார் வீட்டுக்கு பேசினோம். பரமசிவம் எங்களுக்காக தயாரித்த சிறந்த சமையலை வயிறார உண்டோம். பின்பு இரவு 9.00 மணக்கு பரமசிவத்துடன் காட்டை சுற்றிப்பார்க்க கிளம்பினோம். பரம்சிவம் முன்னே டார்ச் வெளிச்சம் காட்டிக்கொண்டு செல்ல ஊத்துசாலையில் சுமார் 2 கிலோமீட்டர் நடந்தோம். இரவின் இருட்டில் சாலையின் கீழுள்ள சின்ன பள்ளத்தாக்குகளில் மிளாக்கள் மற்றும் காட்டெருமைகளின் கண்கள் இருட்டில் ஒளிருவதை காணமுடிந்தது. நடைபயணம் சென்று வந்ததால் நல்ல தூக்கம் வந்தது. சில காட்டுப்பன்றிகள் விருந்தினர் மாளிகையின் பின்புறம் வந்துபோவது தெரிந்தது. ஆனால் இருட்டில் சரியாக தெரியவில்லை.